அமெரிக்க குடியுரிமை மற்றும் க்ரீன் கார்டை பெற இந்தியர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் முண்டியடிக்கின்றனர்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் விசாவுக்காக விண்ணப்பித்தாலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விசா கிடைக்காது என்பது ஒருபுறம் என்றால், அவர்கள் கோரும் வகையான விசா கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஆனால் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை நிரூபிக்கும் வகையில் செல்வந்தர்களுக்கு விசா கிடைப்பது எளிதானதாகவே இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் 174 இந்திய பணக்காரர்கள் தங்கள் பண பலத்தால் அமெரிக்க கிரீன் கார்டு பெற்றிருக்கின்றனர்.
திகைப்பாக இருக்கிறதா? இது கனவல்ல, நிஜம். உலகிலேயே மாபெரும் வல்லமை கொண்ட நாடாகவும், பணக்கார நாடாகவும் கருதப்படும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கு உங்களிடம் பணம் இருந்தால் போதும்.
பணத்தை அடிப்படையாகக் கொண்டு விசா வழங்குவதால் அமெரிக்காவிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 4 பில்லியன் டாலர்கள் என்பது அமெரிக்க விசாவின் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
உங்களிடம் பணமும் இருந்து, சில அமெரிக்கர்களுக்கு வேலை கொடுக்கும் மனமும் இருந்தால் போதும், அமெரிக்க குடியுரிமை கிடைப்பது எளிது.
முதலீட்டை அடிப்படையாக கொண்ட விசாவுக்கு ஈ.பி-5 விசா என்று பெயரிடப்பட்டுள்ளது.
நீண்ட வரிசைகளில் இந்தியர்கள்
அமெரிக்காவின் இந்த ஈ.பி-5 விசா திட்டம் அனைவருக்கும் பிடித்தமானது, அதிலும் குறிப்பாக இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் மிகவும் பிடித்தமானது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இந்த விசா திட்டம் மூலம் எத்தனை பேர் கிரீன் கார்டு (நிரந்தர வசிப்புரிமை) பெற்றுள்ளார்கள் என்பது பற்றிய சரியான தகவல்கள் இல்லை.
ஆனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறுவதன்படி, இந்த விசாவைப் பற்றி அதிகளவு விசாரணை செய்வது பாகிஸ்தானியர்கள் அடுத்த இடத்தில் இருப்பது இந்தியர்கள்.
பட்டியலின் அடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், தென்னாஃப்ரிக்கா மற்றும் செளதி அரேபியா நாட்டு மக்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஈ.பி-5 விசாவைப் பெறுபவர்களில் சீனா முதலிடத்திலும், வியட்நாம் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
நூற்றுக்கணக்கான இந்தியர்கள் விண்ணப்பிக்கின்றனர்…
ஆண்டுதோறும் பத்தாயிரம் ஈ.பி-5 விசாக்களை அமெரிக்கா வழங்கினாலும், பெறப்படும் விண்ணப்பங்களோ ஒதுக்கீட்டைவிட பல மடங்காக உள்ளது.
பிபிசியின் ஒரு அறிக்கையின்படி ஒவ்வொரு ஈ.பி-5 விசாவை வழங்குவதற்காக ஏறத்தாழ 23 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இதை 1:23,000 என்றும் சொல்லலாம். அதாவது ஆண்டுக்கு பத்தாயிரம் விசாக்களை அமெரிக்கா வழங்கும் நிலையில் அதற்காக குவியும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையோ 23 கோடி!
கடந்த ஆண்டு 174 இந்தியர்கள் ஈ.பி -5 விசாவை பெற்றிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுகிறது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்படி இருந்தாலும், இந்த கோல்டன் விசாவிற்காக (நிரந்தர வசிப்புரிமைக்கான விசா) மாதந்தோறும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
உண்மையில், டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா விதிகளை கடுமையாக்கிவிட்டது. இதையடுத்து, திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பது கடினமாகிவிட்டது.
எச்.1-பி விசாவிற்கு கடுமையான விதிகள்
'அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை' என்னும் தனது கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் டிரம்ப்பின் நிர்வாகத்தில், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீஸ்), விப்ரோ போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்ல, எச்.1-பி விசா வைத்திருப்பவர்களின் உரிமைகளையும் கட்டுப்படுத்தியிருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அதாவது எச்.1-பி விசா வைத்திருப்பவர்களை சார்ந்து அமெரிக்காவில் குடியேறிய மனைவி/கணவர் மற்றும் அவர்களுடன் வசிப்பவர்களுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் உயர் கல்வி பெற்றவர்களாக இருந்து, தற்போது அமெரிக்காவில் வேலைசெய்பவராக இருந்தாலும், வேலையை இழக்க நேரிடும்.
டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா வழங்கிய எச்.1-பி விசாவை பெற்றவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.
இந்த காரணங்களால்தான் ஈ.பி-5 விசா வாங்குவதற்கு இந்தியர்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர். 1990 ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்ப்ட்ட ஈ.பி-5 விசாவின் மீது கடந்த சில ஆண்டுகளாகத் தான் அனைவருக்கும் மோகம் ஏற்பட்டுள்ளது; அதிக அளவில் விண்ணப்பிக்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தரவுகளின்படி, 2005ஆம் ஆண்டு வெறும் 349 கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டன, இது 2015ஆம் ஆண்டில் 9,764 என்று உயர்ந்துவிட்டது.
அதற்கு பிறகோ, ஈ.பி-5 விசாவுக்கான விண்ணப்பங்கள் மலைபோல் குவியத் தொடங்கிவிட்டன. இதனை அடுத்து, வேறு வழியில்லாமல் இந்த விசாவுக்கான அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சரி இந்த விசாவில் அபாயங்கள் எதாவது இருக்கிறதா?
•முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ஆபத்தான சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
•முதலீட்டில் இருந்து வருவாய் கிடைக்கும் என்ற உறுதியில்லை என்பதால் ஆபத்து அதிகம்.
• அரசு ஆண்டுதோறும் இந்த கொள்கையை மாற்றியமைக்கும் என்பதால், குறிப்பிட்ட சில நாட்டு மக்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம்.
வாய்ப்புகள் எங்கே?
- அமெரிக்கா மட்டுமே பணத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நாடு அல்ல.
- சைப்ரஸ் முதல் சிங்கப்பூர் என, தற்போது உலகின் 23 நாடுகள் முதலீடு செய்வதற்கு பிரதிபலனாக குடியுரிமை வழங்குகின்றன.
- ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக சில திட்டங்களை செயல்படுத்துகின்றன.
- 10-15 ஆண்டுகளுக்கு முன்பு, முதலீடு மூலம் குடியுரிமை பெறுபவர்களில் சீன நாட்டு குடிமக்கள் முன்னணியில் இருந்தனர்.
- ஆனால் ஒரு அறிக்கையின் படி, சமீபத்திய ஆண்டுகளில், துருக்கி நாட்டு மக்கள் பிற நாடுகளில் குடியுரிமை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
- மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பாவில் குடியுரிமை பெறுவது தொடர்பான விசாரணைகளின் எண்ணிக்கை 400 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
- குடியுரிமை வழங்குவதற்காக ஏலம் விடும் நடைமுறை பல நாடுகளுக்கு மிகவும் பயனளிக்கிறது. உதாரணமாக, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாடு, குடியுரிமையை ஏலம் விட்டு, நாட்டின் கடன் சுமையை குறைத்ததோடு, துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
- இதேபோல், ஈ.பி-5 விசாக்களின் மூலம் அமெரிக்கா ஆண்டுதோறும் பெறும் லாபம் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர்கள் என்பதும் ஆச்சரியமானதாக இருக்கிறது.
கோல்டன் விசாவுக்கு எதிர்ப்பு
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் குடியுரிமைக்கான ஏல நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி-5 விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இரு எம்பிக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். இதுபோன்ற திட்டங்கள் செல்வந்தர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்க்ள் கூறுகின்றனர்.
பொதுமக்களும் இந்த வகை விசாக்களை பெறுவதில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சட்டவிரோதமாக பணமோசடி செய்வது, ஹவாலா வணிகம் போன்ற குற்றங்களையும் செய்ய இது மக்களை தூண்டுகிறது.
இந்த விசா திட்டத்தின்படி ஒரு நாட்டில் வசிக்கும் உரிமை பெறும் சிலருக்கு, வழக்கமான வழிமுறைகளில் அந்த நாட்டிற்குள் செல்வதற்கே அனுமதி கிடைக்காது என்பதும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் பெருமளவு உண்மையும் இருக்கிறது.
2017 ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எஃப்.பி.ஐ வழங்கிய தகவல்களின்படி, ஈ.பி-5 விசா திட்டத்தின் கீழ் 5 மில்லியன் டாலர் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் சீன முதலீட்டாளர்களும் அடங்குவார்கள்.
அதேபோல், 2017 ஏப்ரல் மாதத்தில், சீன முதலீட்டாளர் ஒருவர், அமெரிக்கர் ஒருவர் தனது பணத்தை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடுத்திருந்தார்.
செய்ண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டின் விசா திட்டத்திற்காக, இரானிய குடிமக்கள் ஹவாலாவில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
2017ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் சீன முதலீட்டாளர்களை ஏமாற்ற முயற்சித்த விவகாரம் வெளியானது.
இந்த வழக்கும் ஈ.பி-5 விசாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.