கொங்கோவிலுள்ள தாமிரச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க - கொங்கோவில் ஜாம்பியாவின் தெற்கு எல்லைப்பகுதியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமம் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த சுரங்கத்திலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அட்டிப்படையிலும் பல நூற்றுக்கணகான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வழக்கபோல் இந்த சுரங்கத்தில் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் மண்சரிவு ஏற்பட்டதில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்றைய நிலைவரப்படி பலரை உயிருடன் காப்பாற்றிய மீட்பு படையினர் 36 பிரேதங்களையும் மீட்டனர்.
இன்றைய நிலைவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சுரங்கத்தினுள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் இவ்விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுரங்களில் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என பொதுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.