நின்ற கோலத்தில், வணங்கிய நிலையில்தான் நாம் அனுமனைத் தரிசித்திருப்போம். ஆனால், சயனக் கோலத்தில் அருள்புரியும் அனுமனைத் தரிசித்திருக்கிறீர்களா? இந்தியாவிலேயே மூன்று தலங்களில் மட்டும்தான் ஆஞ்சநேயர் சயனக் கோலத்தில் அருள்புரிகிறார். அவற்றில் முக்கியமான தலம் `ஸ்ரீபத்ர மாருதி கோயில்’. இந்தக் கோயில் மகாராஷ்டிர மாநிலம், குல்தாபாத்தில் அமைந்திருக்கிறது. மற்ற தலங்கள் உத்திரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் யமுனை ஆற்றங்கரையிலும், மத்திய பிரதேசத்தில் ஜம் சவாலி எனும் இடத்திலும் அமைந்திருக்கின்றன. இந்த மூன்று தலங்களுமே ஆன்மிகச் சிறப்பு மிக்க தலங்களாகும்.
மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சிறு நகரமான குல்தாபாத். குல்தாபாத் நகரத்தின் பழங்காலப் பெயர் பத்ராவதி. பத்ராவதி என்றால் `புனித பூமி’ என்று பொருள். ஔரங்கசீப் காலத்தில் பத்ராவதியானது குல்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குல்தாபாத் என்பது பார்சி மொழிச் சொல். இதற்கு `சொர்க்கத்துக்கான நுழைவாயில்’ என்று பெயர். இரண்டு பெயர்களுமே இந்த இடத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் இந்த நாட்டை பத்ரசேனர் என்பவர் ஆண்டு வந்தார். அவர், ஸ்ரீராமரின் அதிதீவிர பக்தர். செல்வத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் நாட்டமில்லாமல் வாழ்ந்த பத்ரசேனர், ஸ்ரீ ராமரைப் பற்றிய பாடல்களைப் பாடுவதிலும், அவரைப் பற்றிய கதைகளைக் கேட்பதிலுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். மக்கள் இவரை `ராஜரிஷி பத்ரசேனர்’ என்றே பக்தியோடு அழைத்து வந்தனர். தனது இஷ்ட தெய்வமான ராமரை `பத்ரா’ என்றே அன்புடன் அழைத்து வழிபட்டார் பத்ரசேனர். ராமருக்குச் சிறிய கோயில் ஒன்றை எழுப்பி அதற்கு அருகில் `பத்ரகுண்டம்’ எனும் தீர்த்தக் குளத்தையும் நிர்மாணித்தார். ஸ்ரீராமரின் அருளால் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கும் `பத்ரா’ என்றே பெயர் வைத்தார். `பத்ரா’ எனும் பெயரின் அடிப்படையிலேயே தனது நாட்டுக்கும் பத்ராவதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
ஒரு நாள் பத்ரசேனர் தன்னை மறந்த நிலையில் இசை இசைத்து, ராம நாம கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது வானத்தில் பறந்துகொண்டிருந்த அனுமன் காற்றில் மிதந்து வந்த கீதத்தைக் கேட்டு மெய் மறந்து பத்ரசேனரை நோக்கி வந்தார். இதயத்திலிருந்து எழுந்த பத்ரசேனரின் ராம கீதத்தைக் கேட்டபடியே அவருக்குமுன் அமர்ந்த அனுமன் இசையில் மயங்கிப் படுத்தவர் அப்படியே உறங்கியும் போவார். அனுமன் படுத்த கோலம் `பாவசமாதி’ நிலை என்று அழைக்கப்படுகிறது.
கண்மூடிய நிலையில் ராம நாமத்தைப் பாடி மகிழ்ந்த பத்ரசேனர் நெடுநேரம் கழித்துக் கண் விழித்தார். கண் விழித்தவர் திடுக்கிட்டார். ஏனெனில் அவருக்கு முன்பு அனுமன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.
ஸ்ரீஅனுமனை வணங்கிய பத்ரசேனர், ``என்றென்றும் இதே சயனக் கோலத்தில் ராம பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அனுமனும் பத்ரசேனரின் வேண்டுகோளை ஏற்றதால் `ஸ்ரீபத்ர மாருதி’ எனும் பெயர் பெற்று, அதே சயனக் கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் இன்று வரை அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். `அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த போது இந்த இடத்தில்தான் ஓய்வெடுத்தார். அதனால் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்’ என்ற புராணக் கதையும் இந்தக் கோயிலுக்கு வழங்கப்படுகிறது.
கருவறையில் ஸ்ரீபத்ர மாருதி வெள்ளிக் கிரீடம் தரித்து, கதை ஏந்தி, செந்தூரம் தரித்த சிவந்த மேனியோடு, யோக நித்திரையில் ஆழ்ந்தபடி சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஆலயத்துக்குள் செல்லும்போது அனுமனின் பாதத்தைத் தரிசித்துத் தொட்டு வணங்கிய பிறகே அனுமனைத் தரிசிக்க வேண்டும். கோயில் சுவரெங்கும் இந்தத் தலத்தின் தல வரலாற்றை விளக்கும் புராணக் கதையும், அனுமனின் வண்ண ஓவியங்களும் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. கருவறைக்கு முன்பு ஏழடி உயரப் பிரமாண்ட அனுமனின் புகைப்படமும், ஸ்ரீ ராமரின் புகைப்படமும் கண்ணாடி பிரேம் போட்டுக் காணப்படுகின்றன. ஸ்ரீபத்ர மாருதியை வழிபடும் பக்தர்கள் இந்தப் படங்களுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்கிறார்கள்.
சயனக் கோல ஸ்ரீபத்ர மாருதியை வழிபட்டால், 'நலன்கள் அனைத்தும் கிடைக்கும். திருமணப் பருவத்தில் இருப்பவர்களுக்குத் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கி உடனே திருமணம் நடக்கும்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை. சனி தோஷம் இருப்பவர்கள் ஸ்ரீபத்ர மாருதியை விருப்பத்துடன் வந்து வணங்கிவிட்டுச் செல்கிறார்கள்.
கோயிலுக்கு வெளியே ஆலமரத்தடியில் பழைமையான சிவலிங்கமும், பத்ரசேனரின் சுதைச் சிலையும் காணப்படுகிறது. அனுமனை வணங்குகிறவர்கள் பத்ரசேனரையும் வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். அனுமன் ஜயந்தி மற்றும் ராம நவமி போன்ற விழாக்களின்போது கோயிலில் கூட்டம் கட்டுக்கடங்காது என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். மற்ற நாள்களிலும் அரைமணி நேரம் வரிசையில் நின்ற பிறகே அனுமனைத் தரிசிக்க முடியும். அந்த அளவுக்குப் புகழ் பெற்ற தலம் இது.
நன்றி : https://www.vikatan.com