நன்றி : BBC Tamil
இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலும், தமிழகத்தின் பெரும்பாலான வேளாண் பகுதிகளிலும், இலங்கையின் குறிப்பிட்ட பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சிக்குக் காரணம் மனிதர்களின் பழிவாங்கலோ, விலங்குகளின் அட்டகாசமோ அல்ல. அமெரிக்காவிலிருந்து கிளம்பி, ஆப்பிரிக்காவிற்கு சென்று, அங்கு விவசாயத்துறையில் மிகப் பெரிய பாதிப்பதை ஏற்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வந்து பயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் படைப்புழுக்களே காரணம்.
விதைத்து சில வாரங்களே ஆன தனது சோள பயிர்களை மாலைவரை பார்த்துவிட்டு, இந்த பருவத்திலாவது நல்ல மகசூலை தரவேண்டுமென்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு செல்லும் விவசாயிகள், மறுநாள் காலை வரப்பிற்கு வந்து பார்க்கும்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலும், தமிழகத்தின் பெரும்பாலான வேளாண் பகுதிகளிலும், இலங்கையின் குறிப்பிட்ட பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சிக்குக் காரணம் மனிதர்களின் பழிவாங்கலோ, விலங்குகளின் அட்டகாசமோ அல்ல. அமெரிக்காவிலிருந்து கிளம்பி, ஆப்பிரிக்காவிற்கு சென்று, அங்கு விவசாயத்துறையில் மிகப் பெரிய பாதிப்பதை ஏற்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வந்து பயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் படைப்புழுக்களே காரணம்.
ஆம், விவசாயிகளின் பல்லாண்டுகால அனுபவத்திற்கும், அவர்கள் அடிக்கும் விதவிதமான பூச்சிக்கொல்லி மருந்துக்கும் சளைக்காத படைப்புழுக்கள் தற்போது தமிழகத்திலும், இலங்கையிலும் விவசாயத் துறையில் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளன.
படைப்புழுக்கள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன? அது விளைவிக்கும் பேராபத்திலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?
இத்தனை நாள் கேள்விப்படாத படைப்புழு எங்கிருந்து வந்தது?
புழுக்கள் அல்லது பூச்சிகளை எடுத்துக்கொண்டால் நன்மை செய்யக்கூடியது மற்றும் தீமை செய்யக்கூடியது என இரண்டு வகைகள் உள்ளன. அதில், தீமை செய்யக்கூடிய வகையை சேர்ந்த புழுக்களிலேயே மோசமானது ஸ்போடாப்டிரா ஃப்ரூஜ்பெர்டாடா என்னும் உயிரியல் பெயர் கொண்ட படைப்புழு.
படைப்புழுக்களின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் தலைவர் முத்துகிருஷ்ணனை தொடர்பு கொண்டோது அவர் தெரிவித்த கருத்துகள்.
"வெறும் 30 நாட்கள் வாழும் படைப்புழுக்கள் மற்ற புழுக்களை போலன்றி, பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறக்கக்கூடியது. முதன் முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த படைப்புழுக்கள் அங்கிருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூண்டோடு அழித்து விவசாய துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மக்களை ஆளாக்கியது.
இந்தியாவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற விழிப்போடு கடந்த சில ஆண்டுகளாக வேளாண் விஞ்ஞானிகள் செயல்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் படைப்புழுக்களின் அட்டகாசம் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக விவசாயம் மேற்கொள்ளப்படும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையிலும், முதன் முதலாக கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் இரவோடு இரவாக படைப்புழுக்கள் சோளப் பயிர்களை நாசம் செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
மற்ற புழு வகைகளோடு முற்றிலும் வேறுபட்ட பயிர் தாக்குதலை தொடுக்கும் படைப்புழுக்களே அது என்பது ஆய்விற்கு பின் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து படைப்புழுக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்கும் இயற்கை மற்றும் செயற்கையான வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்."
"16 கால்கள், ஒரே சமயத்தில் 300 முட்டைகள்"
"தனது வாழ்நாளில் புழுவிலிருந்து அந்துப்பூச்சியாக உருமாறியவுடன் உடனடியாக இனச்சேர்கையில் ஈடுபடும் இவை ஒரேசமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இடும் தன்மையை கொண்டது. சில நாட்களில் முட்டையிலிருந்து வெளிவரும் படைப்புழுக்களுக்கு 16 கால்கள் இருப்பதுடன் அடுத்த இரு வாரங்களில் 3 மிமீ என்ற அளவிலிருந்து 2 ½ செ.மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் தன்னாலான அளவுக்கு அதிகப்படிப்பான சோளம் உள்ளிட்ட தனக்கு விருப்பமான பயிர்களை உட்கொண்டு பிறகு மண்ணுக்குள் செல்கிறது. மண்ணுக்குள் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும் அவற்றின் கால்களின் எண்ணிக்கை ஆறாக குறைந்து, புதிதாக இரண்டு இறக்கைகளும், கண்களும் பெற்றுக்கொண்டு ஆண், பெண் அந்துப்பூச்சிகளாக உருவெடுக்கும்.
மண்ணுக்குள்ளிருந்து வெளியே பறந்து வரும் பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கையை மேற்கொள்ளும் எண்ணத்துடன் சுரக்கும் ஒருவித வாசனை திரவத்தால் கவர்ந்தெழுக்கப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் அதைத்தேடி சென்று இனச்சேர்க்கையில் ஈடுபட்டு முன்னர் கூறியதை போன்று ஒரே சமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இலைகளில் இட்டு அதை ஒருவித திரவத்தை கொண்டு மூடி பாதுகாக்கின்றன.
பின்பு அங்கிருந்து அடுத்த இடத்தை நோக்கி பறந்துசென்று தனது பணியை தொடருகின்றன. ஒருவேளை பெண் அந்துப்பூச்சியால் இனச்சேர்க்கையில் ஈடுபட முடியவில்லை என்றால் அடுத்த சில நாட்களில் அது உயிரிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று படைப்புழுக்களின் வித்தியாசமான வாழ்க்கைமுறையை விளக்குகிறார் பேராசிரியர் முத்துகிருஷ்ணன்.
"இயற்கை விவசாயமே தீர்வு"
இயல்பான முதலீட்டில், அதிகளவு மகசூலை பெற்று குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மண்ணின் வளத்தையும், விவசாயத்தின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாரி தெளித்தவர்களின் செயல்பாடே படைப்பூச்சிகளின் படையெடுப்பிற்கு காரணம் என்று கூறுகிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம்.
சமீபகாலமாக இயற்கை விவசாய முறைகளை கடைபிடித்து செய்யப்படும் பல்வேறு உணவுப்பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
பூச்சிக்கொல்லிகளையும், மற்ற வேதிப்பொருட்களையும் தெளிக்காது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயன்படுத்தாது உற்பத்திசெய்யப்படும் மக்கா சோளம், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, "உண்மையான இயற்கை விவசாய முறைகளை கடைபிடிக்கும் எவருக்கும் இந்த படைப்புழுக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் அனைத்துவித சத்துக்களுடன் பிறப்பதை போன்று, ஒவ்வொரு தாவரத்துக்கும் அதற்கு ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன் உள்ளது.
ஆனால், விளைச்சலை பெருக்கி காட்டுகிறேன் என்று கூறிவிட்டு தெளிக்கப்படும் வேதிப்பொருட்களால் சில ஆண்டுகளுக்கு அதிக மகசூலை பெறும் விவசாயிகள் சீக்கிரத்தில் தங்களது மண்ணின் சத்துகளையும், பல்லாண்டுகாலமாக சேர்த்து வைத்த வளத்தையும் இழக்கின்றனர். அதுமட்டுமன்றி, விவசாயிகளின் நண்பனாக திகழும் நன்மை செய்யும் புழுக்களை கொல்வதுடன், தரம் குறைந்த உணவு உற்பத்திக்கும் வழிவகுக்கின்றனர்.
மேலும், காலப்போக்கில் அனைத்துவித பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் ஏற்றதாக தங்களது உடலமைப்பை தகவமைத்து கொள்ளும் படைப்புழுக்கள் உள்ளிட்ட இன்னும்பிற தீமை செய்யும் பூச்சிகள் எதற்கும் கட்டுப்படாத நிலைக்கு உயர்ந்து விவசாய துறைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறுகிறார்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விதைகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தனியார் விதை நிறுவனங்கள் சரிவர பரிசோதனை செய்யாமல் ஆரோக்கியமற்ற விதைகளை சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் பெற்றுக்கொண்டு விவசாயிகளின் வற்றில் அடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.
படைப்புழுக்களை கட்டுப்படுத்தவே முடியாதா?
அபரிமிதமான அளவில் பல்கி பெருகி, நாடு நாடாக பயணித்து விவசாயத்தை நசுக்கி வரும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான இயற்கை மற்றும் செயற்கை வழிமுறைகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு தமிழ்நாடு வேளாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் முத்துகிருஷ்ணன் கூறுகிறார்.
"விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் வேறுபட்ட பயிர் வகைகளை முயற்சி செய்வதும், உழவு செய்தவுடன் வேப்பம் புண்ணாக்குகளை நிலத்தில் போடுவதும் படைப்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தீமை செய்யும் புழுக்கள், பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும். அது மட்டுமின்றி, வரப்பு பயிர்களையும், வேலி செடிகளையும் வளர்ப்பதன் மூலம் பிரச்சனையிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.
செயற்கையான வழிகளை பார்க்கும்போது, இரவில் மட்டுமே அட்டகாசத்தில் ஈடுபடும் படைப்புழுக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மின் விளக்குகளை அமைத்து அவற்றை திசைதிருப்பி மொத்தமாக பிடித்துவிடமுடியும். மேலும், பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்கு தயாராகும்போது வெளியிடும் பெரோமோன் என்னும் திரவத்தை செயற்கையாக வெளிப்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை ஏமாற்றி மொத்தமாக பிடிக்க முடியும்" என்று படைப்புழுக்களை அதன் வாழ்க்கை போக்கின் பல்வேறு நிலைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அவர் பட்டியலிடுகிறார்.