''எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பை வழங்க என்னளவில் முயற்சித்துள்ளேன். நான் பதினைந்து ஆண்டுகள் இலங்கைக்காக விளையாடியுள்ளேன். ஆனால் அணியை விட்டு விலக இது சரியான நேரம் என நினைக்கிறேன் ஏனெனில் நாம் 2023 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தேன். நான் வெளியேறவேண்டும்''
வெள்ளிக்கிழமை நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு பெற்ற பின்னர் மலிங்கா கூறிய வார்த்தைகள் இவை.
தனது யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை மிரள வைத்த மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
10 சுவாரஸ்ய தகவல்கள்
1. லசித் மலிங்கா என உலகம் முழுவதும் அறியப்பட்டாலும் அவரது முழு பெயர் செபரமடு லசித் மாலிங்க. 1983-ல் பிறந்த மலிங்காவுக்கு வயது 35 ஆகிறது.
2. இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படும் சமிந்தா வாஸ் ஓய்வு பெற்றபின் அவரது இடத்தை நிரப்பக்கூடிய ஆளாக, பந்துவீச்சு படைக்கு தலைமையேற்று வழிநடத்தும் வீரராக இவர் விளங்கினார்.
3. மலிங்காவின் பந்துவீசும் முறை மற்றும் அவரது ஹேர்ஸ்டெயில் பலரையும் கவர்ந்த ஒன்று. வலதுகை பந்துவீச்சாளரான மலிங்காவை '' ரெத்கம எக்ஸ்பிரஸ்'' என்று ரசிகர்கள் புகழ்கிறார்கள்.
4. சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் மலிங்காதான். 2007 உலகக்கோப்பையில் 210 எடுத்தால் போட்டியில் வெற்றிபெற முடியும் எனும் இலக்கோடு தென்னாப்பிரிக்கா விளையாடியது.
32 பந்துகளில் வெற்றிக்கு நான்கு ரன்கள்தான் தேவைப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா கையில் 5 விக்கெட்டுகள் இருந்தன. 45-வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 47-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் இருவரை வெளியேற்றினார்.
10 பந்துகளில் ஒரு ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா. கடைசியில் தட்டுத் தடுமாறி தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
5. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே பௌலர் மலிங்கா. 2007-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2011-ல் கென்யா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார்.
6. உலகக்கோப்பையில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் எனும் பெருமையும் மலிங்காவுக்கு மட்டுமே. வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007 உலகக்கோப்பையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராகவும் கொழும்பு மண்ணில் நடந்த 2011 உலகக்கோப்பைத் தொடரின் ஆட்டமொன்றில் கென்யாவுக்கு எதிராகவும் ஹாட்ரிக் எடுத்தார்.
7. 1983 உலகக்கோப்பையில் கபில்தேவ் - கிர்மானி படைத்த ஒரு சாதனை 27 ஆண்டுகளுக்கு பின்னர் மலிங்கா - மேத்யூஸ் ஜோடியால் தகர்க்கப்பட்டது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில்தேவ் - கிர்மானி இணை 9 வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்ந்திருந்தது. 2010 -ல் மெல்பர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் - மலிங்கா இணை 9-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அப்போட்டியில் 240 ரன்களைத் துரத்திய இலங்கை அணி 107 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் மலிங்கா - மேத்யூஸின் அபார ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மலிங்கா அப்போட்டியில் 48 பந்துகளைச் சந்தித்து ஆறு பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் விளாசி 56 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
8. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 10 பேரில் மூவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். முரளிதரன் 534 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். வாஸ் 322 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மலிங்கா 15 ஆண்டுகளில் 226 போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
9. ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஓர் ஆட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் மலிங்கா உள்ளார். பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 13 முறை குறைந்தது 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முரளிதரன் 10 முறை இதைச் சாத்தியப்படுத்தினார். அப்ரிடி மற்றும் பிரெட் லீ 9 முறை சாதித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக எட்டு முறை ஒருநாள் போட்டிகளில் குறைந்தது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மலிங்கா. 11 முறை நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.
10. ஐக்கிய அமீரகம் அணிக்கு எதிராக 2004-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய மலிங்கா தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ளார். இப்போட்டியில் தான் வீசிய கடைசி பந்தில் விக்கெட் எடுத்தார். அந்த பந்தோடு வங்கதேச அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்தது. இலங்கை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இப்போட்டியில் மலிங்கா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2011-ல் ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டிகளில் 2019-ல் ஓய்வு பெற்றார். டி 20 போட்டிகளில் அடுத்தாண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை வரை விளையாடுவேன் என மலிங்கா கூறியுள்ளார்.
இறுதித் தருணத்தில் லசித் மாலிங்க, மஹிந்தவிற்கு ஏன் நன்றி கூறினார்?
ஆர் பிரேமதாஸ மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லசித் மாலிங்கவிற்கு பிரியாவிடை அளிப்பதற்காக வருகைத் தந்திருந்தனர்.
லசித் மாலிங்கவின் பிரியா விடை கிரிக்கெட் போட்டிக்கு அரசியல்வாதிகள் பலரும் வருகைத் தந்து, கிரிக்கெட்டை கண்டுகளித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் கூட நேற்றைய போட்டிக்கு வருகைத் தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இந்த போட்டி நிறைவடைந்ததன் பின்னர் மைதானததை சூழ்ந்திருந்த ரசிகர்கள் மத்தியில் லசித் மாலிங்க உரையாற்றினார்.
தான் பாரிய உபாதைக்கு உள்ளாகியிருந்த சந்தர்ப்பத்தில் குணமடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே உதவிகளை வழங்கினார் என இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவிக்கின்றார்.
'2008ஆம் ஆண்டு எனக்கு காலில் உபாதை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் என்னை எவரும் பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை. காலில் ஏற்பட்ட உபாதையை குணப்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அப்போது எனக்கு டாக்டர் எலியந்த வைட்டை அறிமுகப்படுத்தினார். உபாதையிலிருந்து மீள்வதற்கு அவர் உதவிகளை செய்தார். இன்றும், நாளையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நானும், எனது குடும்பத்தாரும் மதிக்கின்றோம்" என லசித் மாலிங்க தெரிவித்தார்.
தனது கொள்கைகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சாதகமான பதிலை வழங்கும் பட்சத்தில் தான் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை நிலைத்திருப்பதாக லசித் மாலிங்க தெரிவிக்கின்றார்.
அவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடமிருந்து தனக்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் தான் இருபதுக்கு இருபது போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றை போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்த போதே லசித் மாலிங்க இதனைக் குறிப்பிட்டார்.
'தெரிவுக்குழுவிடம் எனது ஓய்விற்கான அறிவிப்பை தெரிவிக்க சென்றிருந்தேன். அப்போது அவர்கள் என்னுடன் உரையாடினார்கள். தற்போது என்வசமுள்ள இருபதுக்கு இருபது தலைமைத்துவத்தை 2020ஆம் ஆண்டு வரை அவ்வாறே முன்னோக்கி கொண்டு செல்லுமாறு அவர்கள் என்னிடம் கூறினார்கள். இந்த ஒரு நாள் சர்வதேச போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் நான் திட்டமொன்றை தயாரிக்கவுள்ளேன்.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் என்னை போன்று இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய வேறு யாரும் இருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னை பெரிதுப்படுத்துவதற்காக நான் இதனைக் கூறவில்லை. நான் நீண்ட நாட்கள் இதனை பார்த்துக் கொண்டிருந்தேன்.
பாதாளத்திற்கு விழும் சந்தர்ப்பம் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பயிற்சிகளை எவ்வாறு பெறுவது, பயிற்சிகளுக்குள் எந்த வகையிலான பயிற்சிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிறிய எண்ணமொன்று காணப்படுகின்றது. இந்த போட்டிகளுக்கு தேவையான 20 தொடக்கம் 25 வீரர்களுடனான குழுவொன்றை அமைக்க வேண்டும்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக எமக்கு 19 போட்டிகள் காணப்படுகின்றன. இறுதித் தருணத்தில் இதனை செய்ய முடியாது என எம்மால் கூறமுடியாது. தலைவர் நான் என்ற விதத்தில், எனக்கு தேவையான விதத்தில் விளையாடக்கூடியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். எனது கொள்கையை நான் தெரிவுக்குழுவிடம் கூறுவேன். அதற்கு அவர்களில் பதில் எவ்வாறு அமைகின்றது என்பதையும் பார்ப்பேன். சாதகமான பதில் கிடைக்குமானால் இருப்பேன். இல்லை என்றால் பை சொல்லி விட்டு செல்வேன்" என லசித் மாலிங்க குறிப்பிட்டார்.