யூடியூப்பில் தற்கொலை சம்பந்தமான வீடியோக்களை பார்த்து, சிறுமி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ரதோட். இவரது மகள் ஷிகா (12). இந்த சிறுமி தனது தந்தையின் மொபைல் போனில் யூடியூப் சேனலை அடிக்கடி பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். குறிப்பாக தற்கொலை தொடர்பான வீடியோக்களையே ஷிகா விரும்பி பார்த்து வந்துள்ளார். மேலும், இது குறித்து தனது தாயிடமும் கூறியுள்ளார். இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தனியாக இருந்த போது எலாஸ்டிக் கயிற்றால் மின்விசிறியில் ஷிகா தூக்குப் போட்டு தொங்கினாள். அந்த நேரத்தில் சத்தம்கேட்டு அங்கு வந்து பார்த்த சிறுமியின் சகோதரி அதிர்ச்சியடைந்த இதுகுறித்து பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்த பெற்றோர் தூக்கில் இருந்து ஷிகாவை கீழே இறக்கி நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஷிகா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.