ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.
இதுவரை உலகில் நடந்ததிலேயே மிகவும் பரபரப்பான ஒரு நாள் போட்டி என்று சற்றும் தயங்காமல் சொல்லக்கூடிய அளவுக்கு ஆட்டத்தின் போக்கு அமைந்தது.
ஐம்பது ஓவர்கள் முடிவில் டையில் முடிந்த போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால், சூப்பர் ஓவருக்கான விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுதாக அறிவிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முடிந்த போட்டி
பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் போட்டி நுழைந்தது. அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது.
அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய நிலையில் ஓவர் துரோ மூலம் அந்த பந்து பவுண்டரி சென்றதால் இங்கிலாந்துக்கு அந்த பந்தில் மொத்தம் ஆறு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓடிய ரஷீத் ரன் அவுட் செய்யப்பட்டார்.
கடைசி பந்தில் இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்நிலையில் ஒரு ரன் எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது வுட்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே இங்கிலாந்து கடைசியில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.எனவே சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணியின் சார்பாக களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இரண்டு பவுண்டரிகளை சேர்த்து 15 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட் பந்து வீசினார்.
அடுத்து நியூசிலாந்து அணியின் சார்பாக கப்தில் மற்றும் நீஷம் களமிறங்கினர். இங்கிலாந்தின் சார்பாக ஆர்ச்சர் பந்து வீசினார். சூப்பர் ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணியும் 15 ரன்களை எடுத்திருந்தது. எனவே சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.
டையில் முடிந்த சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவர் டையில் முடிந்தால் தங்களது இன்னிங்ஸிலும், சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதன்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி 24 பவுண்டரிகளையும், நியூசிலாந்து அணி 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தன.
அதே போல் சூப்பர் ஓவரில் ஒரு அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழக்க முடியும். இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்கவில்லை ஆனால் நியூசிலாந்தின் கப்தில் ரன் அவுட் ஆனார்.
இதன் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.