5ஜி என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்? என யாழ்ப் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில மாதிரி ஸ்மார்ட் லாம் போல் ஒன்று யாழ்ப்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேருந்துச் சேவை இடம்பெறும் இடத்தில்) அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டது.
அந்த ஸ்மார்ட் லாம் போல் திட்டத்திலே பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்படுவதுடன், வெளிச்சத்திற்காக மின் விளக்குகளை பொருத்துதல், எதிர்காலத்திலே வரயிருக்கின்ற கிறீன் சிட்டி திட்டம் உலகமயமாக்கலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் எலக்ற்றோனிக் கார் வருகின்ற பட்சத்தில் கார்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய வசதி மற்றும் மழைகாலங்களிலே முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இடிதாங்கிகள் உள்பட அந்த கம்பங்களை அமைப்பதென்றும், ஏதேனும் தொழிநுட்ப சாதனங்களை மேலதிகமாக அதிலே பொருத்துவதாக இருந்தால் அதற்கு மேலதிகமான ஒரு உடன்படிக்கை எங்களுடைய உடன்படிக்கையில் பேசப்படும் என்ற விடயங்கள் உள்ளடங்களாக கடந்த ஒரு வருடமாக இந்த விடயம் எங்களுடைய சபையிலே பல தடவைகள் பேசப்பட்டது.
இறுதியாக ஸ்மார்ட் லாம் போல் கம்பங்களை நிறுவுவதற்கு உரிய ஏற்பாடுகள் அனைத்துக்கும் ஏதுவான காரணங்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இதிலே அன்டணா பொருத்துவது என்ற விடயம் மாநகரத்திற்கு தெரியாமல் அவர்கள் பொருத்தவும் முடியாது, அதிலே பொருத்தப்படுகின்ற அன்டணா தற்பொழுது என்ன அலைவரிசையை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றோமோ அந்த தொலைத் தொடர்பு சேவையை அந்த பரிவர்த்தனையை செய்வதற்கு ஏற்ற வசதிகளை எந்த எந்த இடங்களிலே மக்களுக்கு அசௌகரியங்களாக இருக்கின்ற இடங்களை அடையாளப்படுத்தி அந்த இடத்திலே இந்த பரிவர்த்தனையை அமைப்புக்களை போடுவதன் மூலமாக அந்த மக்களுக்கு ஒரு சிறிய சேவையை வழங்க முடியும் என்ற உயர்ந்த நோக்கம்தான் அந்த ஸ்மார்ட் கம்பத்திலே இருக்கின்றது.
ஆனால் இது சபையிலே கொண்டுவந்து ஒரு வருடத்திற்கு பிறகு பல சர்ச்கைகள் தோற்றுவிக்கப்பட்டு இதை அனுமதிப்பதா? இல்லையா? என்று நிலை உருவாகியிருக்கின்றது. இலவசமாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் தாங்களாகவே முன்வந்து இதனுடைய நன்மை தீமைகளை நீங்கள் அறிந்து தரும் பட்சத்தில் நாங்கள் இதனை செய்கின்றோம் என்று வந்த ஒரு நிறுவனத்திற்கு விலை மனுக் கோர வேண்டும் என்று சபை தீர்மானித்தமையினால் அதனையும் நாங்கள் கோரியிருந்தோம்.
சகல விடயங்களும் சபையினுடைய அங்கத்தவர்களுக்கு தெரியாது என்ற எண்ண நிலைப்பாட்டுக்கு அப்பால் சகல விடயங்களும் மிக வெளிப்படைத்தன்மையோடு முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
சிலர் தங்களுக்கு தெரியாது, சபையிலே அனுமதி எடுக்கவில்லை என்றெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் அந்த நேரத்திலே எங்கே இருந்தார்கள் என்று எனக்குச் சொல்ல முடியாது. அது அல்ல பிரச்சினை. ஆனால் இவ்வாறான அனுமதியை வழங்கும் போது இறுதியாக நடந்த கூட்டத்திலே அனுமதி வழங்கப்படுகின்றது.
கம்பங்கள் எங்கெங்கே பொருத்தப்படுகின்றன என்ற விடயத்திற்கு எங்களுடைய மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர பொறியியலாளர்கள், அதுபோன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர்கள், சகலருடைய அனுசரணையோடு, இந்த இணைப்புக்கள் அந்தந்த வட்டாரங்களிலே வரும் என்று சொன்னால் அந்த உறுப்பினர்களோடு சென்று பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பட்சத்தில் அது அந்தந்த இடத்திலே பொருத்துவதற்கு அனுமதிப்பது என்ற தீர்மானம் என்னால் சொல்லப்பட்டது.
அதற்கு ஒரு உறுப்பினர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார், இடங்களை மீண்டும் சபைக்கு கொண்டு வந்து அனுமதிப்பது தொடர்பில், நான் அதற்கு மீண்டும் சபைக்கு இடங்கள் வராது, அனுமதி வழங்கப்பட்டிருந்கின்றது, நீங்கள் பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொடுக்கும் பட்சத்தில் அந்த இடத்திலே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன். உடன்படிக்கையின் பிரதியும் சபையிலே கொடுக்கப்பட்டு அதனுடைய சரி பிழைகள் ஆராயப்பட்டு சில திருத்தங்கள் சொல்லப்பட்டன. அந்த திருத்தங்கள் தெளிவுபடுத்தப்பட்டு சகல உடன்படிக்கையும் முறைப்படி எந்தவித மாற்றமும் இல்லாமல் நாங்கள் அந்த நிறுவனத்தோடு உத்தியோகபூர்வமாக செய்திருக்கின்றோம். அதன் பிறகு அந்த வேலையை அவர்கள் முறைப்படி ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஆனால் இப்பொழுது பார்த்தால் 5ஜி (5G) கொண்ட பரிவர்த்தனையை யாழ்ப்பாணம் மாநகரத்திலே கொண்டுவந்து மாநகர முதல்வர் பொருத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றார், இதனால் 5 மாதக் குழந்தையும் கருவிலே கரைந்து விடும் என்ற செய்திகள் மட்டுமன்றி மிக மோசமான உள நோயாளர்களைப் போன்று சில கற்பனைகளை அவர்கள் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டிருக்கின்றார்கள்.
ஆகவே என்னிடம் இருக்கக்கூடிய கேள்வி இந்த உலகளாவிய ரீதியில் 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை வழங்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய வல்லரசுகளுடைய ஆதிக்கத்திற்கு போட்டித்தன்மை நிறைந்த இந்த பொருளாதார காலங்களில் எந்த நாடு இதனை முதலில் எடுப்பது என்ற இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவ்வாறான நாடுகளுக்கு இந்த 5ஜி (5G) தொழிநுட்ப பரிவர்த்தனை செல்லாதவிடத்து இந்த 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை நேராக இலங்கையிலே இலங்கை அரசுக்கு தெரியாமல், யாழ்ப்பாணம் நகரத்திலே கொண்டு வந்து பூட்டுவதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டிருக்கின்றார்கள்.
இது உலகலாவிய ரீதியில் இருக்கின்றதா? ஏனைய நாடுகளிலே பயன்படுத்தப்படுகின்றதா? அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் இந்த பரிவர்த்தனை ஆசியாக் கண்டத்திற்கு வருவதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆசியாக் கண்டத்திற்கு வருமாக இருந்தால் தென்கிழக்காசிய நாடுகளில் இருக்கக்கூடிய நாடுகளுக்கென்று, அந்தப் பிராந்தியத்திற்கு வழங்கப்படவேண்டும். அதிலே இலங்கை என்றால் இலங்கையினுடைய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டால் இந்த தொழில் நுட்பம் இலங்கைக்கு அந்த நிறுவனம் அனுமதித்தால் அந்த திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதில் என்ன தயக்கம் நாங்கள் காட்ட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி?
இவ்வாறான 5ஜி (5G) என்ற விடயம் என்பது ஒரு கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. இவ்வாறான ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்?
தற்பொழுது 4G என்ற தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். உலகிலே பல்வேறு நாடுகளிலே உற்பத்தி செய்யப்பட்ட அதிதிறன் அலைபேசிகளை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு இந்த நவீன தொழிநுட்ப முறையின் ஊடாக இருக்கக்கூடிய சில பல பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவை. இருப்பினும் பெரியோர்களிலிருந்து சிரியோர்கள் வரை இந்த நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிக்கின்றார்கள். அவ்வாறு இருந்தால் யாழ்ப்பாணத்திலே இந்த தொழில் நுட்பம் 4G இருக்கின்றது. அது போல் இலங்கையிலும் இருக்கின்றது.
இதேபோன்று இலங்கையில் இந்த 5ஜி (5G) என்ற தொழில் நுட்பம் வந்தால் அதனை யாழ்ப்பாணம் நகரத்திலே மக்கள் பாவிக்கக் கூடாது அல்லது யாழ்ப்பாண குடாநாட்டு மக்களோ, அல்லது வடபுலத்திலிருக்கக்கூடிய மக்களோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த எங்களுடைய பிரதேசங்களிலே இது இருக்கக்கூடாது என்று யாரும் தடை போட முடியாது. ஆகவே அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று நாங்கள் அறியோம்.
இன்றிருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சீரிய முறையில் எங்களுடைய மக்களுக்கு சிறப்பாக கொடுப்பதற்காக நகரங்களை நவீனமயப்படுத்தல் என்ற திட்டத்தை நாங்கள் பல நாடுகளுக்கு போயிருக்கின்றோம். ஸ்மார்ட் சிற்றி, மொடர்ன் சிற்றி, மொடல் சிற்றி என்ற எண்ணக்கருக்குக் கீழே பல்வேறு மாநாடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறான மாநாடுகளில் பங்குபற்றுவதற்காகத்தான் நான் மாநகர சபையில் இருக்கக்கூடிய எங்களுடைய உறுப்பினர்களை அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புதிய தகவல் தொழில் நுட்பங்களை அறிவதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவுத் திட்டத்திலே ஒதுக்கியிருந்த போதும் அதனை நிராகரித்து இன்று அவ்வாறான தொழில்நுட்ப அறிவுகளை சீரியமுறையில் பெறாமல் பிழையான தகவல்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் மக்கள் மனதிலே கட்டவிழ்த்துவிட்டு மக்களுடைய எண்ணங்களிலே சலசலப்பை ஏற்படுத்தி இந்தத் திட்டங்கள் மீது மோசமான பரப்புரையை மேற்கொள்கின்றார்கள். ஆகவே இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.
ஒரு முதல்வராக நான் எங்களுடைய மக்களுக்கு கூறுகின்ற செய்தி என்னவென்றால் என்னுடைய அடிப்படை எண்ணம் என்னவென்றால், எங்களுடைய பண்பாட்டு விழுமியங்கள், கலாசாரங்கள் எந்த நேரத்திலும் பாதிப்படையாத வகையில், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆரோக்கியமான ஒரு நகரத்தை நவீன வசதிகளோடு உரிய சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நான் முன்வைத்து இந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.
ஆகவே நான் கூறுகின்ற விடயம் என்னவென்றால் நாங்கள் ஒரு இலக்கை தீர்மானித்துவிட்டோம். அந்த இலக்கை அடைவதற்கு சில சீரான, நேர்மையான பாதையிலே முன்னெடுக்கின்றோம். வழியிலே இருந்து கல்லெறிந்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்னுடைய இடத்தை நான் சேரும் வரை.
ஆகவே அந்த அடிப்படையில் தவறான, நெறிபிறழ்வான பக்க விளைவுகளையோ ஆபத்துக்களையோ ஏற்படுத்துகின்ற எந்த ஒரு செயல்பாட்டையும் ஒரு முதல்வராக நான் முன்னெடுக்கமாட்டேன். ஒரு சூரிய ஒளியிலே ஏற்படுகின்ற ஆபத்தை விட, ஒரு உயரமான கோபுரத்திலுள்ள அலைவரிசையினால் ஏற்படுத்தப்படுகின்ற பக்கவிளைவுகள் ஆபத்துக்களை விட 1000 இல் ஒரு மடங்கு ஆபத்து குறைந்த நவீன ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE ) களைதான் நாங்கள் நிறுவிக்கொண்டிருக்கின்றோம்.
அதிலே தற்போதுள்ள 4G இனை பொருத்துவதற்கு அவர்கள் பரிவர்த்தனை நிலையம் ஊடாக அனுமதியை பெற்று வந்த பிறகு அவர்களுடைய அனுமதி கிடைக்கப்பெற்றால் மட்டுமே அதிலே நாங்கள் பொருத்துவதற்கு அனுமதிப்போம். அதுவரையில் ஏனைய சேவைகள் அந்தக் கம்பங்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும்.
எனவே தவறான, பொய்யான பரப்புரைகளை நம்பி உங்களையும், மக்களையும் குழப்பத்திற்குட்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தயவு செய்து ஒரு நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கருமங்களை ஆற்றுவதற்கு வழிவிடவேண்டும் என்று தயவாகக் கேட்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை. என்றும் அவர்களோடு பணியாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம் அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு நிறைவு செய்கின்றேன் – என்றுள்ளது.