பெண் குழந்தையாக பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகியுள்ளார்.
'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என்ற நம்பிக்கை திருத்தணி பகுதியில் நாராயணபுரம் கிராமத்தில் பின்பற்றப்படுகிறது.
தனக்கு வைக்கப்பட்ட பெயரின் காரணமாக பலரின் வினோதமான பார்வைகளையும், வியப்பான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார் மாணவி 'வேண்டாம்'.
''எங்கள் கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடியும்வரை என் பெயரை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. என் வகுப்பில் இரண்டு மாணவிகளுக்கு 'வேண்டாம்' என்ற பெயர் இருந்ததது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது மற்றும் பொறியியல் கல்விக்காக கலந்தாய்வுக்குச் சென்றபோது பலரிடம் என் பெயருக்கான விளக்கத்தை சொல்லவேண்டியிருந்தது. முதலில் தயங்கினாலும், தற்போது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன்,'' என்கிறார் 'வேண்டாம்'.
தற்போது பி.ஈ.(எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்) இறுதியாண்டு படிக்கும் இவர், ஆகஸ்ட் 2020ல் ஜப்பானில் உள்ள ஹுமன் ரிஷோஸியா(Human Resocia)என்ற நிறுவனத்தில் குறியீடு பொறியியலாளராக பணிக்குச் சேரவுள்ளார்.
''ஆண் படித்தால், குடும்பத்திற்கு வருமானம் வரும், வெளிநாட்டு வேலைக்கு ஆண் துணிந்து செல்வான் என்ற எண்ணம் சமூகத்தில் நிலவுகிறது. நான் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் உதவித்தொகை பெற்று படித்தேன். முழு கவனத்துடன் என்னை தயார் செய்து தற்போது வெளிநாட்டு வேலைக்கு செல்லவுள்ளேன். எங்கள் கிராமத்தில் பலரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்,''என்கிறார் 'வேண்டாம்'.
பொறியியல் படிப்போடு ஜப்பானிய மொழியை கவனமாக படித்துவருகிறார் 'வேண்டாம்'.
'நான் விரும்பிய பொறியியல் படிப்பில் குறியீடு தொடர்பான வேலைக்கு செல்லப்போகிறேன். அதோடு ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிய ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் அது எனக்கு மேலும் உதவும். எங்கள் கல்லூரியில் ஜப்பானிய மொழி அல்லது ஜெர்மன் மொழியை கற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஜப்பானிய மொழியின் அடிப்படை எழுத்துக்களை கற்றுவருகிறேன்,''என்கிறார் அவர்.
'வேண்டாம்' மாணவியின் முன்னேற்றத்தை கேள்விப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அவரை பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான தூதுவராக நியமித்துள்ளார்.
''பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பதாக ஆட்சியர் கூறினார். இனி என் குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வராது. அதேபோல எங்கள் ஊரில் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களில் என்னை பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.என் குடும்பத்திற்கு பெருமையான தருணம் இது,''என்கிறார் வேண்டாம்.
'வேண்டாம்' மாணவி பயிலும் கல்லூரியின் தலைவர் பி.ஸ்ரீராம் மாணவியின் வெற்றியை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
''இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் நடந்த நேர்காணலில் 11 பேர் தேர்வாகியிருந்தனர். அதில் 'வேண்டாம்' மாணவியும் ஒருவர். மாணவர்களின் பெயர் பட்டியலை பார்த்தபோது, இவரின் பெயர் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. பெண் குழந்தைகள் முன்னேற எத்தனை தடைகள் உள்ளன என்பதை உணர்த்தியது இவரது கதை. படிப்பில் சிறந்த மாணவி 'வேண்டாம்' மை போல பல சாதனை மாணவிகள் நம் சமூகத்திற்கு வேண்டும்,''என்றர் ஸ்ரீராம்.
'வேண்டாம்' மாணவியின் தந்தை அசோகனிடம் பேசினோம். ''எங்கள் குடும்ப பெரியவர்கள் கூறியதால், 'வேண்டாம்' என மூன்றாவது பெண் குழந்தைக்கு பெயர் வைத்தேன். நான்காம் குழந்தை பெண்ணாகத்தான் பிறந்தது. ஆனால் நான்கு பேரும் படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களின் எதிர்காலத்திற்கு அவர்களின் கல்வி மட்டும்தான் உதவும் என உறுதியாக நம்பினேன். என் ஒவ்வொரு குழந்தையும் முன்னேற்ற பாதையில் செல்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,''என்கிறார் விவசாயத் தொழிலாளியான அசோகன்.