வடமேற்கு பங்களாதேஷில் திருமண வைபத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகையிரதத்தால் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன.
தலைநகரிலிருந்து சுமார் 145 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உலஹ்பரா பிராந்தியத் தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையொன்றை அந்த வேன் கடக்க முயற்சித்த போது டாக்கா நகரை நோக்கிப் பயணித்த புகையிரதத்தால் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விபத்து இடம்பெற்ற போது அந்த வேனில் 14 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக புகையிரத விபத்துகள் இடம்பெறுவது வழமையாகவுள்ளது. அந்நாட்டிலுள்ள சுமார் 2,500 புகையிரதக் கடவைகளில் சுமார் 40 சதவீதமானவை பாதுகாப்பற்றவையாகும்.
கடந்த ஆறரை வருட காலப் பகுதியில் அந்நாட்டின் 2,800 கிலோமீற்றர் புகையிரதப் பாதை வலைப்பின்னலில் இடம்பெற்ற விபத்துகளில் சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி விக்கின்றனர்.