இந்திய மகளிர் ரக்பி அணி தனது முதல் சர்வதேச அளவிலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் தொடர்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மணிலாவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீராங்கனைகள் சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டனர்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினர்.
அனுபவம் மிக்க சிங்கப்பூர் அணியின் வீராங்கனைகளின் முயற்சி கடைசி வரை பலனளிக்காததால் 21-19 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தங்களது வரலாற்று சிறப்புமிக்க முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்ததோடு, வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச்சென்றது.
போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீராங்கனைகள் சிலர் ஆனந்த கண்ணீர் வடிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது.
ஆசிய ரக்பி கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த காணொளியில், இந்திய வீராங்கனை ஒருவர் இந்திய ஆண்கள் ரக்பி அணியின் வீரர் ஒருவரிடம் அழுத்துக்கொண்டிருப்பதும், சக வீராங்கனைகள் அவர் அழுவது காணொளியாகப் பதிவு செய்யப்படுவதை புன்னகையுடன் கூறுவதும் காட்டப்படுகிறது.
இதை ஆயிரக்கணக்கானோர் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.
இந்திய மகளிர் ரக்பி அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலிடத்துக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட சீனா 68-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.