பாக்கிஸ்தானால் கைதுசெய்யப்பட்டு விடுதலையான இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமனை அடிப்படையாக வைத்து பாக்கிஸ்தான் தயாரித்துள்ள கிரிக்கெட் தொடர்பான வீடியோவினால் சர்ச்சை உருவாகியுள்ளது
ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும் பாக்கிஸ்தானும் உலக கிண்ணப்போட்டியில் மோதவுள்ள நிலையில் இந்த வீடியோவை பாக்கிஸ்தான் வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படை விமானியை போன்ற ஒருவரை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானிய படையினரிடம் சிக்குண்டவேளை அபிநந்தன் கேள்விகளிற்கு பதிலளிக்க மறுத்திருந்தார். நான் இந்த கேள்விகளிற்கு பதில் அளிக்க கூடாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளம்பரத்திலும் அபிநந்தன் போன்ற ஒருவரிடம் பாக்கிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்கள் யார் என்பது போன்ற கேள்விகள் எழுப்பபடுகின்றன.
எனினும் தேநீர் அருந்தியபடி அபிநந்தன் அந்த கேள்விகளிற்கு பதில் அளிக்க மறுக்கின்றார்.
இறுதியில் அந்த தேநீர் கிண்ணத்தை வைத்துவிட்டு செல்லுமாறு அவர் கேட்கப்படுகின்றார்.
தேநீர் கிண்ணம் என்பது உலக கிண்ணத்தை குறிக்கின்றது.
இந்த விளம்பர வீடியோவிற்கு இந்தியர்கள் பலர் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ உணர்வற்றது வெட்கக்கேடானது என பலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்திய பாக்கிஸ்தான் போட்டிக்கு முன்னர் எங்கள் வீரர் அபிநந்தனை கேலி செய்வது வெட்கக்கேடானது என டுவிட்டதில் தெரிவித்துள்ள இந்தியர் ஒருவர் இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிலர் இந்த விளம்பரத்திற்காக இந்தியா பாக்கிஸ்தானை தோற்கடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகள் குறித்து கடும் எதிர்பார்ப்புகள் காணப்படுகின்ற நிலையில் இந்த விளம்பரம் ஆர்வத்தை மேலும் பலமடங்காக்கியுள்ளது.