Source : http://www.virakesari.lk
உலக கிறிஸ்த்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு என்பது சந்தோசம் நிறைந்த ஒரு பெருவிழா ஆகும். ஆனால் அன்று ஆலயங்களுக்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களால் கிறிஸ்த்தவர்களே கண்ணீரில் கரைந்து போனார்கள்.
உலக கிறிஸ்த்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு என்பது சந்தோசம் நிறைந்த ஒரு பெருவிழா ஆகும். ஆனால் அன்று ஆலயங்களுக்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களால் கிறிஸ்த்தவர்களே கண்ணீரில் கரைந்து போனார்கள்.
மனித குலம் செய்த பாவங்களுக்காக தன்னை பலியாக்கி சாவையே வெற்றி கொண்ட இறைமகன் யேசுவின் உயிர்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி, இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். 450 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். சுமார் 50 தொடக்கம் 60 வரையிலான உடல்கள் அடையாளம் காணமுடியாத அவலம்.
இந்த தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் கடப்பதற்குள் சம்பவத்துடன் தொடர்புடைய பலர் சிக்கினார்கள். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தமை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த இடத்தில் இருந்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னெடுத்த ஒவ்வொரு நடவடிக்கைளும் இலங்கைக்கு வரவிருந்த பேராபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினால் அதை யாராலும் மறுக்க இயலாது.
'கிறிஸ்தவ சமூகம் அமைதி காக்க வேண்டும். எவரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது. ஒரு சிலர் செய்த தவறுக்காக முஸ்லிம் சமூகத்தை தவறான கண்ணோட்டத்தில் நோக்கி விடக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் ஊடகங்கள் ஊடாக விடுத்த முதலாவது அறிவிப்பு இதுவாகும்.
இந்த இடத்திலேயே அவரின் மான்பு போற்றத்தக்கதாக இருந்தது. ஒருவேளை தன் சமூகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவை எண்ணி சற்று உணர்ச்சி பொங்க போராயர் மல்கம் ரஞ்சித் பேசியிருந்தால் கூட, இன்று இலங்கை இரத்தக் காடாக காட்சியளித்திருக்கும்.
அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை பேராயர் முன்னின்று செய்தது, இன்றுவரை பல இனத்தவரும் அவரின் முன்மாதிரிகையான செயலை பேசுவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது.
ஒரு குடும்பத்தில் இருவர் மூவர் என பலியான ஒருவரின் மனிநிலை எவ்வாறு இருக்கும் என சாதாரண ஒரு மனிதனால் அறிந்துகொள்ள முடியும். இந்த இடத்தில் நாட்டு மக்களுக்கு உடனடியாக பேராயர் மல்கம் ரஞ்சித்த ஆண்டகை ஆற்றிய உரை பாதிக்கப்பட்ட மக்களின் கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதி காக்க வைத்தது.
நாட்டின் தலைவர் ஜனாதிபதி கூட சம்பவம் இடம்பெற்ற வேளை வெளிநாட்டில் இருந்தார். சம்பவ தினத்தன்று கூட ஜனாதிபதியால் நாட்டுக்கு உடனடியாக வந்திருக்கலாம். ஆனால் மறுநாளே நாட்டை வந்தடைந்தார்.
இதன்போதும் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக நடவடிக்கைகளை ஜனாதிபதியோ, அல்லது பிரதமரோ முன்னெடுக்கவில்லை. மாறாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் படலத்தையே செய்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படப் போகின்றது என 3 மாதங்களுக்கு முன்பதாகவும் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இருந்து 10 நாட்களுக்கும் முன்பதாகவும் ஏன்..! சம்பவத்துக்கு முன்னதாக 2 மணித்தியாலங்களுக்கு முன்பதாக கூட புலனாய்வு பிரிவினரால் உரிய தரப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த புலனாய்வு தகவலின் தீவிரத்தை அரசியல் வாதிகள் அறிந்திருக்கவில்லை என கூறினால் சின்ன குழந்தை கூட கைதட்டி சிரிக்கும்.
இவர்களின் அசட்டை தனத்தால் பறிபோனது என்னமோ அப்பாவி உயிர்கள். அரசியல்வாதிகளின் தவறை தண்டிக்க முடியாதவர்களாக பாதிக்கப்பட்ட மக்கள் அழுது புலம்பி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றார்கள்.
இதேவளை இந்த கோரச் சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் கேவலமான நபர்களும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவ்வாறான நபர்களுக்கு யார் இறந்தாலோ அல்லது அல்லல்பட்டால் கூட கவலையில்லை. இவர்களின் அரசியல் இலக்கை அடைய எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
இது ஒருபுறமிருக்க நாட்டில் காணப்படும் அசாதாரண நிலைமையை சாகஜமாக்கி கொண்டு இனங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய முனையும் சாணக்கியர்களும் சந்தர்பங்களை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றுக்கு அப்பால் சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும். இனங்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு கலவரம் இடம்பெற்று விடக்ககூடாது என ஒரு தனி மனிதன் பேராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
குறிப்பாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்கள் முன்பாக ஒவ்வொரு முறை உரையாற்றும் போதும், முஸ்லிம் அப்பாவி மக்களை யாரும் தண்டித்து விடக்கூடாது என்பதை உறுதிப்பட கூறி வந்தார்.
'மேலும் ஆலயங்களுக்குள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர்களுக்கு கூட ஏன் இதனை செய்கின்றோம் என அறிந்திருக்கமாட்டார்கள். அவர்களை யாரோ மூளைச் சலவை செய்திருக்க வேண்டும். எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என கூறியிந்தார்.
ஆயரின் இவ்வாறான கருத்துகளுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி கண்ணீர்மல்க நன்றிகளை தெரிவித்திருந்ததை கூட ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான பின்னணியில் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் பதிவான சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போருதொட்ட, பலகத்துறை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சங்கங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பை அடுத்து அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரியூட்டப்பட்டது.
பின்னர் பள்ளிவாசல் உட்பட 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளும் அடித்து நாசமாக்கப்பட்டன.
வீடுகளுக்குள் புகுந்த குழுவினர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன் சில வீடுகளில் நகைகள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றனர்.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டபோதும் குழுவொன்று முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
வாள்கள், பொல்லுகளுடன் வருகை தந்த இக்குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டமையினால் பிரதான வீதிக்கு செல்லாமல் உள்வீதிகளால் பிரவேசித்த குழுவினரே இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த அசம்பாவிதங்களின்போது வீடுகள் பல தாக்கப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமாக்கபட்டதுடன் சில வீடுகளில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தின்போது வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர். சிலர் தமது உறவினர்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பு தேடிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயினும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
கர்தினால் நேரில் விஜயம்
இதேவேளை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, பலகத்துறை ஜும்மா பள்ளிவாசல், தெனியவத்த பள்ளிவாசல், பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் ஆகியவற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் சிலர் ஆயரை கட்டித் தழுவிய போது அவர் மீது கொண்டிருந்த மரியாதை காணக் கூடியதாக இருந்தது.
பேராயர் மல்கம் ரஞ்சித் அங்கு உரையாற்றும்போது ,
நான் இங்கு ஒரு முக்கிய விடயத்தை கூற வேண்டும். அதாவது நாங்கள் ஒருபோதும் இஸ்லாம் மதத்தினருக்கு எதிரானவர்கள் அல்லர். . இஸ்லாம் மதத்தை நாம் புரிந்து கொள்கிறோம். நாங்கள் அதனை கற்று ஆராய்ந்திருக்கின்றோம். அது யுத்தத்திற்கானது அல்ல.
நீங்கள் அடுத்த 30 தினங்களுக்கு ரமழான் நோன்பை கடைப்பிடிக்க போகின்றீர்கள் . நாம் இந்த புனிதமான இஸ்லாம் மதத்தை பாதுகாக்க வேண்டும். நாம் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை கூறிவிட்டு செல்லவே இங்கு வந்தேன். நான் இதனை ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றேன்.
அன்று கொச்சிக்கடை மட்டக்களப்பு மற்றும் கட்டுவப்பிட்டிய போன்ற தேவாலயங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் முஸ்லிம் மக்களினால் மேற்கொள்ளப்பட்டவையல்ல. அதனை நான் தெளிவாக குறிப்பிடுன்றேன். இது தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட செயலாகும். அதற்கு முஸ்லிம் மக்களை பலியாக்கிவிடக் கூடாது.
எனவே நாம் ஒருநாளும் உங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம். தயவு செய்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக கையைத் தூக்க வேண்டாம் என கத்தோலிக்க மக்களிடம் இந்த பள்ளிவாசலில் இருந்தவாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். அவ்வாறு எந்த செயற்பாட்டையும் முன்னெடுப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. அவ்வாறு செய்தால் அது கத்தோலிக்க மதத்துக்கு எதிரானதாகும். நாம் இரண்டு தரப்பினரும் சகோதரர்கள். நாம் அனைவரும் ஆதாமின் பிள்ளைகள். எனவே நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நாம் அனைவரும் ஒரு கடவுளையே வணங்குகின்றோம். எனவே நாம் ஒருவரையொருவர் எதிர்த்து செயற்படக் கூடாது. இலங்கையில் முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும். பல தசாப்தங்கள் மக்கள் அவ்வாறே வாழ்ந்துள்ளனர். நீர்கொழும்பிலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்றாகவே வரலாற்றில் வாழ்ந்துள்ளனர். அந்த நிலைமை மீண்டும் ஏற்படவேண்டும். எனவே கிறிஸ்தவ சகோதரர்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது.
நடைபெற்ற அசம்பாவிதத்துக்கு முஸ்லிம்கள் பொறுப்பாக முடியாது. அதனால் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு இடையூறாக இருக்க கூடாது. அமைதியாகவும் சமாதானமாகவும் அனைவரும் வாழ வேண்டும்.
இந்தப் பகுதியில் ஒரு முஸ்லிம் பள்ளிவாசலில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் செய்ய கூடாது. கத்தோலிக்கர்கள் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது நல்லதல்ல. அப்படி செய்தால் நாம் எமது சமயத்திற்கு எதிராக செயற்படுவதை போன்றதாகும். முஸ்லிம் மக்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
அவர்களுடனான சகோதரத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கையை விடுப்பதற்கே நான் இந்த பள்ளிவாசலுக்கு வருகைத் தந்தேன். தயவு செய்து முஸ்லிம் மக்களும் கிறிஸ்தவ மக்களும் சகோதரத்துடவத்துடன் வாழ வேண்டும். குறைபாடுகள் இருக்கலாம். மனிதர்கள் மத்தியில் குறைபாடுகள் ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுமை காத்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். உங்களது முப்பாட்டன்மார் வாழ்ந்ததை போன்று நீங்களும் வாழ வேண்டும். யாருக்கு எதிராகவும் கைகளை தூக்கிவிட வேண்டாம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொறுமையாக செயற்பட வேண்டும்.
நடந்த சம்பவங்களுக்காக எனது கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடந்துவிடக் கூடாது. உங்கள் அனைவருக்கும் அமைதி சமாதானம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்றார்.
இந்த உரையின் மூலம் அனைத்து இன சமூகத்தின் மதிப்பையும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பெற்றுள்ளார்.
குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் பதிவாகியிருந்த சம்பவம் பாரிய போராபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயற்பாட்டால் இவ்வாறான பேராபத்துக்கள் நாட்டில் தவிர்க்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதுவே சமூகத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் பதிவாகமல் இருப்பதற்கு அரசியல் தலைவர்கள் முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தால் போற்றத்தக்கது. ஆனால் சம்பவங்கள் பதிவான பின்னர் நஸ்ட ஈடுகளை வழங்க முன்னிற்பது காலத்தின் தேவை கிடையாது.