சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 41 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தெற்கு கடற்பரப்பிலிருந்து 715 கடல் மைல் தொலைவில் வைத்து 23 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 35 ஆண்களும், 6 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஏழு பேர் உள்ளடங்குகின்றனர். ஏனையவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடையவர்களாவர்.
இவர்கள் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரதும் வைத்திய பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
நாட்டில் உருவாகியுள்ள பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புத் துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கினங்க சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதோ அல்லது உள்நாட்டுக்கு வருகை தருவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விடயம் தொடர்பில் கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறும் ஆட்கடத்தல்கார்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி பொது மக்கள் பணத்தை இழந்துவிடக் கூடாதென்றும், இது போன்ற விடயங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கடற்படை அறிவுறுத்தியுள்ளது.