கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு.
இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம்.
கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு.
தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம்.
முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.
காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை.
''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார்.
''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்'' என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.இந்தியா விடுத்திருந்த எச்சரிக்கை உள்பட, இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மாத்திரமன்றி, புலனாய்வு பிரிவிலும் மறுசீரமைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அவர் இன்று அனுப்பி வைத்துள்ளார்.