இந்தியாவில் கைதான ஐ.எஸ் ஆதரவாளர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னர் டெல்லி அரசு அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆனால் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இதுவரை 45 சிறார்கள் உள்ளிட்ட 359 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதுடன், 500-க்கும் மேற்பட்டவர் காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் ஒரு வாரம் முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும், டெல்லி அரசு அதிகாரிகளால் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜஹ்ரான் ஹாஷிம் என்பவரது தலைமையில் குழு ஒன்று கொடூர தாக்குதலுக்கு திட்டமிடப்படுவதாக அந்த நபர் டெல்லி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.தற்போது ஐ.எஸ் தீவிரவாத குழு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஜஹ்ரான் ஹாஷிம் இடம்பெற்றுள்ளார்.
மட்டுமின்றி ஜஹ்ரான் ஹாஷிம் Thowheeth Jama'ath அமைப்புடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளதும், டெல்லியில் கைதான நபர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாத இலங்கை அதிகாரிகள் தற்போது, தாக்குதல்தாரிகளின் நெருக்கமானவர்களை கண்டுபிடிக்கும் முனைப்பில் மும்முரமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதன் முறையாக தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கையானது, இலங்கை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேலும், ஏப்ரல் 9 ஆம் திகதி பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டிருந்ததாக இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒப்புக்கொண்டுள்ளார்.
11 ஆம் திகதி நீதித்துறை மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்புத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஈஸ்டர் தினத்தன்று முன்னெடுக்கப்பட்ட கொடூர தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாமல் போனது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள இலங்கை மக்களை உலுக்கிய இந்த வெடிகுண்டு தாக்குதல் தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் பலர் மீளவில்லை.