source : BBC Tamil
தொடர் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் டீம்' என்ற குழுவை அனுப்புவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள் என்கிறது இன்டர்போல் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு.
"தேவைப்பட்டால் டிஜிட்டல் தடயவியல், பயோமெட்ரிக்ஸ் ஆகியவற்றில் கூடுதல் நிபுணர்கள் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆய்வு செய்யும் நபர்களையும் அனுப்புவோம்" என்றும் இன்டர்போல் கூறியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் போலீசாராலும் கைது செய்யப்பட்டவர்கள்.
இவர்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு குண்டு வெடிப்பு
கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்து அதனை செயலிழக்க செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அப்பகுதியில் இருந்து மக்கள் பதறியடித்து ஓடும் காட்சிகளை கார்டியன் செய்தியாளர் மைக்கல் சபி ட்வீட் செய்துள்ளார்.
வெடிகுண்டை செயலிழக்க முயற்சித்தபோது, குண்டு வெடித்ததாக பிபிசி செய்தியாளர் அசம் அசீம் கூறுகிறார்.
குண்டு வெடித்த பிறகே அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம் முதலியவை வந்ததாகவும், தேவாலயம் அருகே நின்றிருந்த வாகனம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை வெடிக்கவைப்பதற்காக கொண்டு சென்றபோது வெடிகுண்டு தாமாகவே வெடித்திருப்பதாகத் தெரிகிறது என்றும், கொழும்பில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்து பிற்பகலில் வெடித்த வேன், ஞாயிறன்று தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியது என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
இலங்கை பிரதமரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு தொலைப்பேசி மூலம் அழைத்து, தனது இரங்கல்களை தெரிவித்தார்.
தாக்குதல் குறித்த விசாரணைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை ரணில், டிரம்பிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர நிலை பிரகடனம்
இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை அதிபர் சிறிசேன பிரகடனப்படுத்தவுள்ளார்.
ஏஎன்ஐ மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் இதனை உறுதி செய்கின்றன.
இன்று நள்ளிரவு முதல் இந்த அவசர நிலை அமலுக்கு வரும்.
இந்நிலையில் பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்புவில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெடனேடர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் குண்டுதாரிககளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தாக்குதல்கள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அதிபர் சிறிசேன அமைத்துள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்தினர் இரங்கல்
கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள், இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் ஆகியோர் இலங்கை மக்களுக்கு செய்தி ஒன்றினை பகிர்ந்துள்ளனர்.
அதில் "ஈஸ்டரின் போது இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கும், கிறிஸ்துவ சமூகத்தினருடனும், மற்றும் இலங்கை மக்களுடைனும் இந்நேரத்தில் உடனிருப்போம். எங்கள் பிரார்த்தனைகள் இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் சில இந்தியர்கள் பலி
இலங்கை தாக்குதல்களில் மேலும் சில இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழிலிருந்து எட்டாக உயர்ந்துள்ளது. அனைவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
யார் இந்த தேசிய தவுஹித் ஜமாத்?
இத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு சிறிய முக்கிய சம்பவத்தில் ஈடுபட்டிருந்த குழு, தவுஹித் ஜமாத் அமைப்பாக இருக்க வாய்ப்பிருக்கலாம் என சர்வதேச நெருக்கடி குழு என்ற அமைப்பின் இலங்கைக்கான இயக்குநர் அலன் கீனன் தெரிவித்தார்.
"கடந்த டிசம்பர் மாதம் மர்வனெல்லாவில் சில புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. அப்போது சில இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் போதகராக அறியப்பட்ட நபரின் பெயர் புலனாய்வு ஆவணங்களில் வெளியாகியுள்ளது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
என்.டி.ஜே. மீது குவியும் கவனம்
பெரிதாக அறியப்படாத நேஷனல் தௌஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) என்ற அமைப்பு இலங்கை குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக புகார்கள் கூறப்படுகின்றன. இதுவரை எந்த அமைப்பும் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கவில்லை.
கடும்போக்கு இஸ்லாமியவாதக் குழுவான ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தில் இருந்து பிரிந்து சென்ற குழுதான் என்.டி.ஜே. என்று கூறப்படுகிறது.
போப் பிரான்சிஸ் கண்டனம்
இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்கு போப் பிராண்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புனித பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசிய அவர், இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவருக்கும் பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதிபர் சிறசேனாவோடு தொலைபேசி உரையாடல்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார் என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதி அவர்களிடம் தனது ஆழ்ந்த கவலையை பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும், மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை கோடிட்டுக் காட்டுகிறது: விக்னேஸ்வரன்
2009 க்கு பின்னர் இலங்கை ஊடாக அந்நிய சக்திகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இந்தத் தாக்குதல்கள் கோடிட்டு காட்டுகின்றன என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தனது பாதுகாப்பானது இலங்கைத் தீவின் உண்மையான அமைதியிலேயே தங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து மதச் சார்பற்ற, வடக்கு கிழக்கு இணைந்த, உச்ச அதிகாரம் கொண்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்தி தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கு முன்னின்று பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவுக்கு உணர்த்துகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உதவியை நாடும் இலங்கை
ஞாயிறன்னு நடைபெற்ற தாக்குதல்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க இலங்கை அதிபர் சிறிசேன, சர்வதேச உதவியை நாடவுள்ளார்.
"இத்தாக்குதல்களுக்கு பின்னால், சர்வதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து, அவர் வெளிநாடுகளின் உதவியை கேட்கவுள்ளார்" என்று அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.
உளவுத்துறையினரை குற்றம் சொல்ல வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சர்
இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்கு, நாட்டின் அரசாங்கத்தையோ அல்லது உளவு சேவைகளையோ குற்றம் சொல்லக்கூடாது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ஹெமசரி ஃபெர்ணான்டோ, இந்த மாத தொடக்கத்தில் வந்த எச்சரிக்கை தகவல்களில், ஒன்று அல்லது இரண்டு தாக்குதல்கள் நடைபெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அது இவ்வளவு பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன் எச்சரிக்கை கடிதம்
ஈஸ்டர் பண்டிகையின்போது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, இப்படி ஒரு தாக்குதல் நடக்கலாம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்ன உறுதிபடுத்தியுள்ளார்.
"ஏப்ரல் 4, அதாவது தாக்குதல் நடப்பதற்கு 14 நாட்களுக்கு முன்பு இதுகுறித்து எங்களுக்கு தெரிய வந்தது" என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 9ம் தேதியன்று தேசிய புலனாய்வு நிறுவனம் கடிதம் எழுதியிருக்கிறது. அக்கடிதத்தில் தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் பெயர்கள் இருந்தன.
சர்வதேச குழு உதவியதா?
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் சர்வதேச குழு ஒன்றின் உதவியோடு நடைபெற்றுள்ளதாக இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
"வெளிநாட்டு நபர்களின் உதவி இல்லாமல் இந்த தாக்குதல் நடக்கும் என்று நாங்கள் நம்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 23 - இலங்கையில் துக்க தினம் அனுசரிப்பு
இலங்கையில் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 290 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, இலங்கையில் நாளை துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கு உத்தரவு
இன்று இரவு 8 மணியிலிருந்து நாளை காலை 4 மணி வரை போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 வரை போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.
அமெரிக்கா எச்சரிக்கை
"இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன" என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அரசு விடுத்துள்ள அந்த எச்சரிக்கை குறிப்பில், "தீவிரவாதிகள் சிறிது அல்லது எவ்வித எச்சரிக்கையுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டென்மார்க் தொழிலதிபரின் குழந்தைகள் உயிரிழப்பு
டென்மார்க்கை சேர்ந்த தொழிலதிபரின் மூன்று குழந்தைகள் நேற்று நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் விடுமுறைக்காக அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களின் பெயர் மற்றும் வயது விவரங்கள் வெளியிடவில்லை.
46 வயதான ஏண்டர்ஸ் ஹால்ச் பாவல்சன் ஏஸஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவர்.
தாக்குதல்கள் குறித்து விளக்கம்?
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில், தாக்குதல்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் தெளிவூட்டப்பட்ட ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இதன்படி, தற்கொலை குண்டு தாக்குதல், துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்துதல், கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்துதல், வாகனத்தின் ஊடாக தாக்குதல் நடத்துதல் போன்ற தாக்குதல் விதங்கள் தேசிய புலனாய்வு பிரிவினரால் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்திலேயே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் மீட்பு
பதுளை - தியதலாவை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது, வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றி வளைப்பு விமானப் படையினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டதாக விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் கியான் செனவிரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இந்த சுற்றி வளைப்பின் போது, ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தியதலாவை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உடைந்த கண்ணாடிகள்
தாக்குதலில் சேதமடைந்த கிங்க்ஸ்பரி நட்சத்திர விடுதி கண்ணாடிகள் உடைந்து கீழே சிதறிக் கிடக்கின்றன.
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?- அமைச்சர் கேள்வி
இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் தாயிம் மொஹமட் சஹரானின் தலைமையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களின் பிரகாரம், தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட சிலர் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களின் முழுமையான தகவல்களும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு, பாதுகாப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை திட்டமிட்ட சந்தேக நபர், சமூக வலைதளங்களின் ஊடாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவின் தகவல்களை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சகத்தினால் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருளில் ஈஃபில் டவர்
இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈஃபில் டவரின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
மேலும் இருவர் கைது
வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் தம்புள்ளை பகுதியில் வைத்து நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதிகளை சேர்ந்தவர்கள் என போலீஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் போலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆறு இந்தியர்கள் பலி
இலங்கையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 17 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த லக்ஷ்மி, நாராயண் சந்திரசேகர், மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தெரிந்திருந்தார்.
இன்று கொலும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையம், கே.ஜி.அனுமந்த்தரயப்பா மற்றும் எம்.ரங்கப்பா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
அவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியினர் என்றும் அவர்களை தனக்கு நன்றாக தெரியும் எனவும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த 58 வயது பி.எஸ்.ரசினா உயிரிழந்துள்ளதாக கேரள முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் சுமார் 27ற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிந்திர ஆரியசிங்க தெரிவித்தார்.
தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு
வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியுடன் இந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்படி, இன்று காலை முதல் அரச பஸ்கள், தனியார் பஸ்கள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
அத்துடன், இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.
’ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று’
"தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அது குறித்து போதியளவு கவனம் செலுத்தாமையானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்" என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே, பிரதமர் இதனைக் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் தான் உள்ளிட்ட அமைச்சர்கள் எந்தவொரு விடயத்தையும் அறிந்திராமை குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்" என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நாடு ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்லப்படுவதனை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்" என கூறியுள்ள பிரதமர், "நாட்டின் ஸ்திரதன்மையை பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: சந்தேக நபர்கள் இருந்த வீடு சுற்றி வளைப்பு
- ''ஆம். உளவு அமைப்புகளுக்கு முன்பே தகவல் வந்தது'' - இலங்கை பாதுகாப்பு அமைச்சர்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் உரிய விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்குள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தினால், போலீஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், போலீஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர, கடிதத்தின் உன்மை தன்மை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
எனினும், தேசிய புலனாய்வு பிரிவினர் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும், அது குறித்து போலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இலங்கை குண்டுவெடிப்பு - 207 பேர் பலி
இலங்கையில் நேற்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட மேலும் ஆகிய இடங்களில் மேலும் இரு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
- இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: 10 முக்கிய தகவல்கள்
- இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் - புகைப்பட தொகுப்பு
இந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 207 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியர்கள் மூன்று பேர் இறந்துள்ளதாக இந்திய தூதரகத்திடம் இலங்கை தேசிய மருத்துவமனை கூறி உள்ளது. லக்ஷ்மி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் ஆகியோர் இறந்துள்ளனர்." தெரிவித்துள்ளார்.
வீடு சுற்றி வளைப்பு
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.
முன்னதாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
தெமடகொட பகுதியில் இந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த சந்தேகநபர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பேரை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியது.