மஹியங்கனையில் புதன் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நேற்று மாலை மண்ணுடன் சங்கமமாகின.
மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் உடல்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டன.
பத்து பேரின் உடல்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.
அங்கு நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்து திரண்டு வந்த ஆயிரம் கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனால் மட்டக்களப்பு நகரம் எங்கும் சோகமயமாக காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் மற்றும் இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் உடல்கள் வைக்கப்பட்டன.
இதன் பின்னர் சடலங்கள் புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இறுதி அஞ்சலி வழிபாடு ஒப்புகொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு பேரின் உடல்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு டச்பார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களின் உடல்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன.
மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், கிராமத்தவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.