முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மாங்குளத்திலிருந்து 24 கிலோமீற்றர் தொலைவிலும் முல்லைத்தீவு நகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலும் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. ஈழத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த சிவாலயங்கள் பல உள்ளன, தான்தோன்றி ஈஸ்வரர் என்னும் பெயரில் இரு பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈசுவரர் ஆலயம். ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் என்னும் இவை இரண்டும் சைவ நன்மக்களின் பெருமதிப்பைப் பெற்றவை. இலங்கையில் பாடல் பெற்ற தலங்களான திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்பவை பறங்கியரால் இடித்துச் சிதைக்கப்பட்டன. ஆனால் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரர் கோயில், தோன்றிய காலந் தொடக்கம் இன்று வரை அழிநிலைக்குட்படாது திகழ்கின்றது.
தோற்றம்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் வன்னிப் பிரதேசத்திற்கு வந்தனர்.
இவர்களுள் இருவர் தற்போது ஒட்டுசுட்டான் என்று அழைக்கப்படும் இடத்தில் பிரிந்து சென்றனர். முதலாவது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தென் மேற்கே 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வாவெட்டிமலையில் தியானத்திலிருந்து சமாதியடைந்தார். இரண்டாவது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தெற்கே 3 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காதலியார் சமளாங்குளத்தில் சமாதியடைந்தார். மூன்றாவது சித்தர் ஒட்டுசுட்டானிலே ஒரு கொன்றைமரத்தின் கீழ்
நிஷ்டையிலிருந்து சமாதியடைந்தார். இவர் சமாதியடைந்த இடத்திலேயே பிற்காலத்தில் லிங்கம் தோன்றியது.
இவ்வாலயம் தோன்றிய காலம் பற்றித் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இவ்வாலயத்திருப்பணி
வேலைகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்றிருப்பதற்குச் சான்றுண்டு. இவைகளைக் கொண்டு கணக்கெடுக்கும் போது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தியதாக இவ்வாலயத்தின் தோற்றத்தைக் கணிக்கலாம்.
யாழ்ப்பாணம் இடைக்காட்டைச் சேர்ந்த வீரபுத்திரர் என்னும் சைவ வேளாளரும் அவருடைய இரண்டு பிள்ளைகளும் வன்னிக்குச் சென்று குடியேறினர். அவர்களும் அவர்களின் சந்ததியினரும் வாழ்ந்த இடம் தற்போது ஒட்டுசுட்டானில் இடைக்காடு என அழைக்கப்படுகின்றது. வீரபுத்திரர் காடு வெட்டிக் குரக்கன் பயிரிட்டார்,
குரக்கன் கதிர்களை வெட்டியெடுத்த பின்னர் குரக்கன் ஒட்டுக்களுக்கு நெருப்பு வைத்தார். அப்படிச் செய்த போது ஒரு கொன்றை மரத்தினடியில் ஒட்டுக்கள் எரியாமல் இருப்பதைக் கண்டார். எப்படியும் ஒட்டுக்களை நீக்க வேண்டும் என்று எண்ணி மண்வெட்டியால் வெட்டினார். வெட்டிய இடத்தில் இரத்தம் கசிவதைக் கண்டார். இந்நிகழ்ச்சியின் மர்மத்தை அறியாத வீரபுத்திரர் அப்பதியை ஆண்ட வன்னியரிடம் கூறினார். வன்னித் தலைவர் குறிப்பிட்ட இடத்தைப் பார்வையிட்ட பின்னர் அவ்விடத்தில் கோவில் அமைத்து வழிபாடு செய்யுமாறு வீரபுத்திரருக்குக்
கூறினார். கொன்றையடிப் பிள்ளையார் என்னும் பெயரில் சிறிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது.
சில நாட்களின் பின் அவ்விடத்தில் சிவலிங்கம் சுயமாகத் தோன்றியதை மக்கள் கண்டனர். தானாகத் தோன்றிய லிங்கமாகையால் தான் தோன்றியீசுவரர் எனப் பெயரிடப்பட்டது. எரியாத இடத்தில் தோன்றியதால் வேகாவனேசுவரர் என்றும் வேகாவனப் பெருமான் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒட்டுக்களைச் சுட்டதனாலேயே பிரபல்யமடைந்த அவ்விடம் ஒட்டுசுட்டான் எனப் பெயர் பெற்றது.
சோழர் காலத்திற்கு சற்று முன் பின்னாக இவ்வாலயத்திருப்பணி வேலைகள் நடைபெற்றிருக்க வேண்டும். இவ்வாலயத்திருப்பணி வேலைகளைக் குளக்கோட்டன் செய்ததாகவும் கர்ணபரம்பரைக் கதையுண்டு. இவன் கோணேச்சரக் கோயில் திருப்பணியை மேற்கொண்டான் என யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகின்றது..
ஒட்டுசுட்டானுக்கு அண்மையிலுள்ள முத்தையன்கட்டுக்குளத்தையும் குளக்கோட்டன் கட்டியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன
குளக்கோட்டன் என்பவன் யார்? ஒரு வரலாற்று நபரா அல்லது கற்பனைப் பாத்திரமா?
அடுத்த பதிப்பில் எதிர்பாருங்கள்............