ஆஸ்திரேலியாவில் வருடமொன்றுக்கு ஒரு லட்சத்தி 90 ஆயிரம் பேர் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்படும் நிலையில், இவர்களில் 45 வீதமானவர்கள் regional பகுதிகளிலோ அல்லது சிறிய மாநிலங்களிலோ குடியமரும்வகையில் மாற்றம்கொண்டுவரப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புதிய குடிவரவாளர்களை regional-நகரங்கள் அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுவருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்த பின்னணியில், சனத்தொகை மற்றும் நகரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Alan Tudge இதுதொடர்பில் இன்று உரையாற்றினார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்களில் 87 சதவீதமானவர்களுக்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் பிரதேசங்களை அண்டியே தங்களது இருப்பிடங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று தரவுகள் மூலம் தெரியவந்திருந்தது.
எனவே ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களை அண்டிய பகுதிகளில் புதிய குடிவரவாளர்கள் பெருமளவில் குடியேறுவதால் ஏற்பட்டுள்ள சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பொருட்டு, இனிமேல் புதிதாக விசா பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேற வருபவர்களை நகரங்கள் அல்லாத பகுதிகளை நோக்கி அனுப்புவதற்கு ஏதுவான சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் Alan Tudge தெரிவித்தார்.
இதன்படி புதிய குடிவரவாளர்களின் விசா நிபந்தனைகளில் மாற்றம் கொண்டுவந்து அவர்கள் 'சில' வருடங்களுக்கு நகரங்கள் அல்லாத பகுதிகளிலோ அல்லது தெற்கு ஆஸ்திரேலியா போன்ற சிறிய மாநிலங்களிலோ சென்று குடியமர்வதை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் Alan Tudge குறிப்பிட்டார்.
எத்தனை ஆண்டுகளுக்கு இந்த நிபந்தனை விதிக்கப்படும் என்றோ அல்லது இந்நிபந்தனையை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்ற விபரங்களையோ அமைச்சர் வெளியிடவில்லை.
இதேவேளை தொழில்துறை விசா மற்றும் குடும்பங்களோடு இணைவதற்கான விசாவுடன் வருபவர்கள் இப்புதிய மாற்றத்திலிருந்து விலக்களிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகிறது.
thank you sbs News.