உலகிலேயே மிக உயர்ந்த சிலை என்ற பெருமையைப் பெறும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை இன்று இந்தியாவில் திறந்துவைக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று திறந்து வைக்கிறார். சுதந்திரமடைந்ததும் சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை இணைத்து ஒரே நாடாக கட்டி உருவாக்கி, இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர் பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல் ஆவார். இந்த சிலைக்கு “ஒற்றுமை சிலை” (Statue of Unity) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே உள்ள ஆற்று தீவான சாதுபேட்டில் 182 மீட்டர் உயரத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிடவும் இது உயரமானது. 2013ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோதே, இந்த சிலையை அமைக்க பணிகள் துவங்கின. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு செலவு செய்து இந்த சிலை அமைக்கப்படவேண்டுமா? என்ற கேள்வியோடு இந்த சிலை அமைக்கும் இடத்தை கையகப்படுத்த பழங்குடி மக்களை அப்புறப்படுத்தியதும், இந்த சிலை நிறுவுவதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் குறித்த கேடும் விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன.