ஆஸ்திரேலியாவின் சிட்னி பெருநகரின் Wentworth நகரில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பெண்மணி Dr.Kerryn Phelps அவர்கள் எளிதாக வெற்றிபெற்றுள்ளார்.
பிரதமராக இருந்த Malcolm Turnbull அவர்கள், பிரதமர் பதவியை இழந்ததால் அவர் இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் Wentworth தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது.
ஆளும் லிபரல் கட்சியின் வேட்பாளர் Dave Sharma அவர்களை Dr.Kerryn Phelps எளிதாக தோற்கடித்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், Dave Sharma எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார் என்பது இன்று இரவு இறுதி செய்யப்படவில்லை என்றாலும், Dave Sharma தமது தோல்வியை ஒத்துக்கொண்டார். ஆளும் லிபரல் கட்சியும் தாம் தோல்வி கண்டிருப்பதாக கூறியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவுகளுக்கு அங்கீகாரம் தரவேண்டுமா என்று நடத்தப்பட்ட தபால் வாக்கெடுப்பின்போது அங்கீகாரம் தரவேண்டும் என்று Wentworth தொகுதியில் கடுமையாக உழைத்தவர் Dr.Kerryn Phelps ஆவார். அவரும் ஓரினச்சேர்கையாளர் ஆவார். அவர் Wentworth தொகுதிமக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். ஆனால் Dave Sharma அந்த தொகுதியைச் சாராதவர் ஆவார். Dr.Kerryn Phelps மருத்துவர் என்பதோடு ஆஸ்திரேலியாவின் மிகவும் சக்திமிக்க அமைப்புகளில் ஒன்றான மருத்துவர்களின் சங்கமான Australian Medical Association (AMA) அமைப்பின் தலைவராக இருந்தவர். இந்த சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார்.
Wentworth தொகுதியில் ஆளும் லிபரல் கட்சி இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. ஆனால் Malcolm Turnbull அவர்களை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியதால் எரிச்சலடைந்த வாக்காளர்கள் ஆளும் கட்சியான லிபரல் கட்சியை கடுமையாக தண்டித்திருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஆளும் கட்சிக்கு இதுவரை வாக்களித்து வந்த சுமார் 20 சத வாக்காளர்கள் அந்த கட்சிக்கு இம்முறை வாக்களிக்கவில்லை என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கீழ் சபை என்று அழைக்கப்படும் House of Representatives யில் மொத்தமுள்ள 150 இடங்களில் ஆளும் லிபரல்-நேஷனல் கூட்டணிக்கு 75 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது Wentworth தொகுதியில் ஆளும் லிபரல் கட்சி தோல்வி கண்டிருப்பதால் இனி 74 உறுப்பினர்களே இருப்பர். எனவே ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே ஆளும் லிபரல்-நேஷனல் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், பிற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த தீர்மானத்தை ஆதரித்தால் அரசு கவிழ்ந்துவிடும். நாடு புதிய தேர்தலைச் சந்திக்கும்.
ஆனால் ஆளும் கூட்டணியை சாராத பல சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளின் உறுப்பினர்கள் ஆளும் லிபரல்-நேஷனல் கூட்டணிக்கு தமது ஆதரவு தொடரும் என்று கூறியிருப்பதால் அரசு தற்போது கவிழாது என்றே பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஒவ்வொரு சட்ட முன்வடிவையும் சட்டமாக்க அரசுக்கு தமது கூட்டணி அரசை சாராத பிற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் அரசுக்கு இது பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதோடு அரசு பல சமரசங்களை செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் என்று நம்பப்டுகிறது. எனவே பிரதமர் Scott Morrison தலைமையிலான அரசு இக்கட்டான சூழலை எதிர்கொள்கிறது என்றும், அரசை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்வரை நடத்திச் செல்வது அவருக்கு எளிதாக இருக்காது என்றும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
Thank you www.sbs.com.au