பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்ட தமிழ்க்குடும்பம் ஒன்று, ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவிருந்தநிலையில், தந்தையின் உடல்நலம் கருதி விமானத்தில் ஏறமுடியாதென அக்குடும்பம் மறுத்துள்ளது.
61 வயதான சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் என்ற பொறியியலாளர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் 2007-ஆம் ஆண்டு வேலை செய்வதற்கான விசாவுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து பிரித்தானியா சென்றிருந்தார்.
இவரது வேலை விசா மார்ச் 2013-இல் முடிவடைந்திருந்தநிலையில் சங்கரப்பிள்ளை குடும்பம் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்காக தாக்கல் செய்த விண்ணப்பம் ஜுன் 2013 இல் அந்நாட்டு அரசினால் நிராகரிக்கப்பட்டதுடன் 2015-இல் இவர்களது மேன்முறையீட்டு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து வெளியேற வேண்டுமென்பது உறுதியான நிலையில் டிசம்பர் 2017-இல் குறித்த குடும்பம் தாமாகவே முன்வந்து ஆஸ்திரேலியா புறப்பட்டபோது சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர்களது பயணம் தடைப்பட்டது.
அதேபோன்று கடந்த பெப்ரவரியில் இக்குடும்பம் அங்கிருந்து புறப்பட்டபோதிலும் சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உடல்நிலை விமானப்பயணம் செய்வதற்கு ஏற்றதாக இல்லை எனக் கருதப்பட்டு அந்தப் பயணமும் தடைப்பட்டது.
இந்தப் பின்னணியில் குறித்த குடும்பம் நேற்று திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டபோதிலும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்ததையடுத்து அவர்கள் விமானத்தில் ஏற மறுத்துவிட்டனர்.
விமானநிலையம் வருவதற்கு முன்னதாக சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்த பிரிட்டன் உள்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகள் அவரது உடல்நிலை விமானப்பயணத்திற்கு ஏற்றதாகவே உள்ளதாக தெரிவித்திருந்தபோதிலும் இறுதிநேரம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து ஏற்கனவே 3 தடவைகள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட தமது தந்தைக்கு விமானப்பயணத்தின் போது உயிராபத்து நேரிடலாம் என தெரிவித்துள்ள அவரது குடும்பம் விமானத்தில் ஏற மறுத்துள்ளது.
இந்தநிலையில் சங்கரப்பிள்ளை குடும்பம் தாமாகவே பிரித்தானியாவிலிருந்து வெளியேறப்போவதில்லை என்பது புலப்படுவதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சு தமது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதாக கூறியுள்ளது.
தற்போது சங்கரப்பிள்ளை குடும்பம் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Thanks sbs.com.au